ஒருபுறம் இடமில்லை; இன்னொருபுறம் கட்டண கொள்ளை-கொரோனா நோயாளிகள் திண்டாட்டம்

கோவை : அரசு மருத்துவமனையில் இடமில்லை, தனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை என இரண்டையும் சமாளிக்க முடியாமல் கொரோனா நோயாளிகள் திண்டாடுகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக  9,200 படுக்கைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடம் கிடைக்காத நிலைமை இருக்கிறது. ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொரோனா நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் இருக்கிறது.

 தனியார் மருத்துவமனைகளில் காலியிடங்கள் இருப்பதாக தவறான தகவல் கூறி ஏமாற்றுவது வாடிக்கையாகிவிட்டது. சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை டெபாசிட் தொகை கட்ட வேண்டும். தினசரி சிகிச்சை கட்டணம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இப்படி கொள்ளை வசூல் நடப்பதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை கட்டணம் முறைப்படுத்தப்படவில்லை. தனியார் மருத்துவமனைகள் கேட்கும் பணத்தை அள்ளிக்கொட்டும் நபர்களுக்கு மட்டுமே சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளிகள் கோவை மாவட்டத்திற்கு சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர். அதிக கூட்டம் வருவதால் தனியார் மருத்துவமனைகள் லாட்ஜ் மற்றும் ஓட்டல் அறைகளை வாடகைக்கு வாங்கி, அதில் நோயாளிகளை தங்க வைத்து, அதிக தொகை வசூலித்து வருகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க, கட்டண கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை முயற்சி எடுக்க வேண்டும்.‌ சிகிச்சை கிடைக்காமல் வீட்டுக்கு விரட்டப்படும் நோயாளிகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் கவலைப்படவில்லை.

முழுமையாக குணமடையாத நிலையில் அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

 இது பற்றி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகையில், “பணம் எவ்வளவு தருவீர்கள் என கேட்ட பின்னரே இடம் இருக்கிறதா இல்லையா என சொல்கிறார்கள். ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் நோயாளிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு மருத்துவமனையில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா? என போராடி வருகின்றனர். கொடிசியா, பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற தற்காலிக மருத்துவமனைகளில் அரைகுறை சிகிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

காப்பீட்டு அட்டையா? வராதீங்க..!

தமிழக அரசின் பொது மருத்துவ காப்பீடு அட்டை இருந்தால், தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பல தனியார் மருத்துவமனையில், அரசின் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு அனுமதி தருவதில்லை. காப்பீட்டு துறையினரும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் இடமில்லை, தனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை, நாங்கள் எங்கேதான் போவது? என மக்கள் திண்டாடுகின்றனர்.

Related Stories: