மேற்குத்தொடர்ச்சியில் தொடர் மழை கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு-குளங்களுக்கு நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் : தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி  உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.

கடந்த ஒரு வாரமாக மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்து, கடந்த 10 நாட்களாக கும்பக்கரை அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு, சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கும்பக்கரை அருவியில் வரும் நீரை, அக்கம்பக்கத்தில் உள்ள குளங்களில் நிரப்பி வருகின்றனர். கோடைக்காலத்தில் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

‘வெள்ளியிலும்’ நீர்வரத்து

கொடைக்கானல்: கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் வெள்ளி நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். நுழைவாயிலில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை கொடைக்கானலுக்கு வருபவர்கள் பார்த்து ரசிக்காமல் செல்வதே இல்லை. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.

இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க மே மாதத்தில் அப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் கூடுவர். ஆனால் முழு ஊரடங்கால், சுற்றுலா பயணிகள் வர தடை உள்ளதால் நீர்வீழ்ச்சி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: