ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் அவலம் நாற்காலி, மேஜை பெயரில் நில உரிமை விபர சான்று

ஆம்பூர்: ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக வழங்கப்பட்ட நில உரிமை விபரத்தில் ஒருவருக்கு நாற்காலி மகன் மேஜை என சான்று வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர்,  நாட்றம்பள்ளி ஆகிய தாலுகாக்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நிலம் தொடர்பாக பட்டா, சிட்டா, ஏ பதிவேடு, நில உரிமை சான்று, நில வரைபடம் ஆகியவற்றை பதிவு செய்து பெற்று வருகின்றனர். இதில் ஆம்பூர் தாலுகாவில் மாதனூர்,  ஆம்பூர், மிட்டாளம், பெரியவரிக்கம், சின்னவரிக்கம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நில பதிவுகள் உள்ளன. தற்போது இந்த நில பதிவுகள் நில அளவை தனி தாசில்தார் மூலம் கண்காணிக்கப்பட்டு சான்றுகள்  வழங்கப்படுகின்றன. மேலும், இ சான்றுகளையும் பொதுமக்கள், தமிழக அரசின் உரிய இ சர்வீசஸ் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2014ம்  ஆண்டு தனது குடும்பத்தினருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள இடத்தை பதிவு செய்தார். பின்னர், அதற்கான பட்டா எண் பெற்று வைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த நிலம் தொடர்பாக விபரங்களை பெற விரும்பிய அந்த குடும்பத்தினர் கடந்த மார்ச் மாதம் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்தனர். அப்போது அதில் இன்னாரது மகன் இன்னார் என யார் பெயரும் இல்லாமல்  நாற்காலி மகன் மேஜை என குறிப்பிட்டு அந்த சான்று வழங்கப்பட்டிருந்தது. இதை கண்ட நில உரிமையாளர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட நில அளவை அலுவலகத்தில் தெரிவித்தபோது உரிய நடவடிக்கை  எடுக்கவில்லை.  இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:  கடந்த 2014ம் ஆண்டு அனைத்து பட்டா, சிட்டா விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டன. அப்போது பலரது விபரங்களை நேரிலோ அல்லது  போனிலோ பெற அந்தந்த பகுதியில் உள்ள விஏஓ அலுவலகம் வாயிலாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், விபரங்களை காலியாகவிட்டு பதிவேற்றம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக டம்மி பெயர் போடலாம் என முடிவு செய்யப்பட்டு, அவ்வாறு  தனிநபர் ஒருவரின் பெயர் பதிவு செய்தால் நாளை உரிமையாளர்  தொடர்பாக பிரச்னை எழ வாய்ப்புகள் அதிகம். இதன்காரணமாக ஜட பொருட்களை பயன்படுத்தி டம்மி பெயரில் பதிவேற்றம் நடந்தது. தற்போது சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய அலுவலகத்தை அணுகி இவற்றை சரி செய்து  கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறினார். அரசு சான்றிதழில் மேஜை, நாற்காலி ஆகிய பெயரில் நில உரிமை சான்றுகள் வழங்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Related Stories: