ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்காற்றி வரும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு தொடர்கிறது. சென்னையை தொடர்ந்து திருச்சி, மதுரை என விற்பனை நிலையங்களை அதிகரித்தாலும் ரெம்டெசிவிர் தேவை படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

ஊரடங்கு நேரத்திலும் அலைமோதும் மக்கள் கூட்டம். இரவு பகல் பாராமல் காத்திருக்கும் நிலை. சாலையிலேயே படுத்துறங்கும் அவலம். சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களில் விற்பனை தொடங்கி 3 நாட்கள் கடந்தும் இதேநிலை தான் தொடர்கிறது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள இயள்முறை மருத்துவக்கல்லூரியில் 500க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர். ஆனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 ரெம்டெசிவிர் குப்பிகள் 50 முதல் 100 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல் நாகை, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருக்கும் இவர்கள் மருந்து கிடைக்கும் வரை எங்கும் செல்வதாக இல்லை.
 
உணவு பொட்டலங்கள் வாங்கி பசியாறிவிட்டு கார்களில் காத்திருக்கின்றனர். சாலையிலேயே படுத்துறங்குகின்றனர். மதுரையிலும் இதே நிலை தான். திங்கட்கிழமை 75 பேருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அவர்கள் மட்டுமே மருந்து பெற முடியும் என்பதை அறிந்தும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

அவர்களை காவல்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியதால் சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் மக்கள் கூட்டம் சற்று குறைய தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக வரிசையில் காத்திருந்தவர்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு அந்த வரிசையின் அடிப்படையில் அவர்கள் கொண்டு வந்துள்ள ஆதார் எண்கள் குறித்து கொள்ளப்படுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை முதல் வரிசையில் காத்திருந்த நபர்கள் இன்றைய தினம் மருந்துகளை வாங்கி செல்கின்றனர்.

விற்பனை நிலையங்கள் மட்டுமல்ல மருந்து விநியோகமும் தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: