திட்ட மதிப்பீடு உயர்கிறதா? எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை துவக்கம்: ஆர்டிஐயில் புதிய தகவல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. 2015ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல்பிரதேசம், அசாம் போன்ற 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. பின்னர் மூன்றாண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வாகி, மதுரை, தோப்பூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019, ஜன.27ம் தேதியன்று, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மத்திய, மாநில அரசுகளின் இழுத்தடிப்பால், அடிக்கல் நாட்டி இரண்டேகால் ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 27 மாதங்கள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. ஆனால் நாட்டிய செங்கல் அப்படியே இருக்கிறதே தவிர, கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கியபாடில்லை. 2015ல் அறிவித்தது முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு இருந்தால் இந்நேரம் இந்த கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க தென்மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

குஜராத்தில் 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ராஜ்கோட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை, தற்காலிக கட்டிடத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. நிரந்தர கட்டிட பணிகளுக்கு கடந்த டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தமானது கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. கடன் தொகை மதிப்பு 22.788 பில்லியன் ஜப்பானிஷ் யென் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1,536.91 கோடி ஆகும். தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடி. திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த திட்ட மதிப்பீடு உயர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது. டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்

இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், “கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. டெண்டர் பணிகள் விரைவில் முடித்து கட்டுமான நிறுவனத்தை விரைவில் முடிவு செய்து, கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். 750 படுக்கை வசதியுடன் கூடிய மதுரை எய்ம்சில் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 நர்சிங் இடங்களும் வர இருப்பதால் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தற்காலிக கட்டிடங்களை தேர்வு செய்து மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்” என்றார்.

Related Stories: