போடிமெட்டு சாலையில் பல்லாயிரம் டன் பாறைகள் சரிவு; இருமாநில போக்குவரத்து முடக்கம்: அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல்

போடி: போடிமெட்டுச்சாலையில் பல்லாயிரம் டன் பாறைகள் சரிந்து விழுந்ததால், இருமாநில போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளாவை இணைக்கும் போடிமெட்டுச்சாலை உள்ளது. இந்த சாலையில் முந்தல் மலையடிவாரத்தில் இருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழக தொழிலாளர்கள், விவசாயிகள் கேரளாவில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்லவும், அம்மாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வரவும், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சாலையின் 4 மற்றும் 5வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில், பிஸ்கட் பாறை மற்றும் ஆகாசப்பாறை இடையே மிக நீண்ட அளவில் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. பல்லாயிரம் டன் எடை கொண்ட பாறைகள் சரிந்து விழுந்ததால், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பிகள், சாலை சேதமடைந்தன. தகவலறிந்த போடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, டூவீலர்கள் செல்லும் அளவுக்கு பாறைகளை அகற்றினர். மேலும், போடிமெட்டு போலீஸ் சோதனைச்சாவடி, முந்தல் சோதனைச் சாவடிகளை மூடுவதற்கு உத்தரவிட்டனர். பின்னர் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோட்ட பொறியாளர் குமணன் தலைமையில் ஜேசிபி மூலம் பாறைகளை உடைத்து அகற்றும் பணி நேற்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. பல்லாயிரம் டன் எடை கொண்ட பாறைகள் என்பதால் உடைத்து அப்புறப்படுத்த ஒரு வாரமாகுமென அதிகாரிகள் தெரிவித்தனர். பாறைகள் விழுந்ததில் சாலையும் பிளவுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருமாநில போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்த தமிழகத்திற்கு வாகனங்கள் வருவதிலும், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஏலத்தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மருந்துகள், காய்கறிகள், அரிசி பருப்புகள் கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: