ரங்கசாமி கொரோனா சிகிச்சையில் இருக்கும் நிலையில் புதுவை பாஜவை சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்எல்ஏ பதவி: மத்திய அரசு உத்தரவு...என்.ஆர். காங்கிரஸ் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், 3 நியமன எம்எல்ஏக்கள் மாநில அரசின் பரிந்துரையின்பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு  வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுதான் நியமன எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்து மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பும். பிறகு அவர்களுக்கு கவர்னர்  பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய பா.ஜனதா அரசே 3 எம்எல்ஏக்களை நியமித்தது. அவர்களுக்கு ராஜ்நிவாசில் அப்போதைய  கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது.  

இந்தநிலையில் 15-வது புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து என்.ஆர். காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதன்படி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.  ஆனால் துணை முதல்வர் பதவி, சரிக்கு சமமாக அமைச்சர் பதவி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரங்கசாமிக்கு பாஜ குடைச்சல் கொடுக்க ஆரம்பித்ததால் அப்பதவிகளை இன்னும் நிரப்ப முடியாத நிலை  தொடர்கிறது. இதனிடையே  முதல்வர் ரங்கசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்களது கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய பாஜ அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்துவின் தம்பி  ராமலிங்கம் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தட்டாஞ்சாவடி முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன், பாஜக  நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு ஆகியோருக்கும் நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு பாஜ மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியிருப்பதால் என்ஆர் காங்கிரஸ் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதுவும் தங்கள் தலைவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும்போது இப்படி ஓர்  அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்களே என குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Stories: