கொரோனா தடுப்பு பணிக்காக 25 மாநில உள்ளாட்சி அமைப்புக்கு 8,923 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு: தமிழகத்திற்கு 523 கோடி விடுவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 25 மாநிலங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8,923 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதில் தமிழகத்திற்கு 523 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, நிபந்தனையற்ற நிதியின் முதல் தவணை வரும் ஜூன் மாதம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுவதாக இருந்தது. எனினும் கொரோனா சூழல் காரணமாகவும், பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட முன்கூட்டியே உதவித்தொகையை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்தது. இதன்படி, தமிழகம் உட்பட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியாண்டின் முதல் தவணையாக 8,923 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு 1441.6 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ₹861.4 கோடியும், பீகாருக்கு 741.8 கோடியும், மேற்குவங்கத்திற்கு 652.2 கோடியும், தமிழகத்திற்கு 533.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றம் என மூன்றடுக்குகளாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

Related Stories: