நாளை முதல் முழு ஊரடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசிதீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில்  தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஏழை எளிய பொதுமக்கள், அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை  அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையையும், அதில் தற்காலிக மருத்துவர்களின் நியமனத்தையும் அதிகரித்து 24 மணி நேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும். நோயாளிகளின் சிரமம்  களையப்படும்.

 கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களது சேவையை கெளரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும்  ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.  மருத்துவமனைகளில் தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

உயிர்பலி  எண்ணிக்கையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து  மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: