தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து திருடி கள்ளச்சந்தையில் விற்பனை: மருந்தக ஊழியர் உட்பட 2 பேர் கைது

சென்னை:  சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த 6 பாக்கெட் கொண்ட ரெம்டெசிவிர் மருந்து மாயமானது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, மருத்துவமனையில் வேலை செய்து வரும் ஓட்டேரியை சேர்ந்த ஜெயசூர்யா(27) என்பவர் இரவு நேரத்தில் மருந்தகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாத போது 6 பாக்கெட் கொண்ட ரெம்டெசிவிர் மருந்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.  அதைதொடர்ந்து சம்பவம் குறித்து மருத்துவமனை மருந்தக மேலாளர் பாஸ்கர்(59) என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார்  ஊழியர் ஜெயசூர்யாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் திருடிய ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு விற்பனை  செய்வதற்காக மதுரவாயல் பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனை ஊழியர் ஸ்டாலின் தாமஸ்(42) என்பவருக்கு 36 ஆயிரத்திற்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் ரெம்டெசிவிர் திருடிய மருந்தக ஊழியர் ஜெயசூர்யா மற்றும் கள்ளச்சந்தையில் மருந்து வாங்கிய ஸ்டாலின் தாமஸ் ஆகியார் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories:

>