மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்: அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: கொள்ளை நோய் பரவும் பேரிடர் கால நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு, சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. மருத்துவ கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.   நுரையீரல் தொற்று எந்தளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் 1,500 ரூபாயில் தொடங்கி 8 ஆயிரம் ரூபாய் வரை விதவிதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு 3 ஆயிரம் ரூபாய் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.

 அமைய இருக்கும் புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். எல்லாவித மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரம் உயர்த்தப்பட்டு, ஒரேமாதிரி கட்டணம் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் இதை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: