நல்லம்பள்ளி அருகே மர்மவிலங்கு கடித்து 10ஆடுகள் பலி

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே மர்மவிலங்கு கடித்து 10ஆடுகள் உயிரிழந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த எர்ரபயனஅள்ளி அருகே உள்ள கெட்டுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (58), விவசாயி. இவர், சொந்தமாக வீட்டின் அருகே ஆட்டுப்பட்டி வைத்து 60 ஆடுகள் வளர்த்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்தவர் கருப்புசெட்டி(55). இவரும் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர்களது பட்டி அருகருகே உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்று விட்டு இருவரும் ஆடுகளை பட்டியில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல சுந்தரராஜ், கருப்புசெட்டி ஆகியோர் சென்றனர். அப்போது, சுந்தரராஜ் ஆட்டுப்பட்டியில் 7 ஆடுகளை மர்மவிலங்கு கடித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. இதேப்போல், கருப்புசெட்டி பட்டியிலும் 3 ஆடுகள் செத்து கிடந்தன.

மேலும், 10 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். மேலும், தொப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: