சென்னை: பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அமைத்துள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கலாஷேத்ரா கல்லூரிக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது கலாஷேத்ரா அறக்கட்டளை. மேலும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பாலியல் புகாருக்குள்ளாகி நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், மற்ற மூன்று உதவி ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பேராசிரியர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை முதல் தொடங்க உள்ள தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நிலையில், மாணவர்களின் புகார்களை விசாரிக்கும் கல்லூரியின் கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த மாணவர் தரப்பில் ஒரு ஆலோசகர், தன்னிச்சையான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும் கலாஷேத்ரா அறக்கட்டளை கூறியுள்ளது.
The post கலாஷேத்ரா பாலியல் புகாரை விசாரிக்க லத்திகா சரண் அடங்கிய குழு… பேராசிரியர்கள் மூவர் டிஸ்மிஸ் செய்தும் உத்தரவு!! appeared first on Dinakaran.