சேலம் அய்யந்திருமாளிகையில் நவீன வசதிகளுடன் ₹2.50 கோடியில் அறிவுசார் ஆய்வு மையம்

சேலம், ஏப்.4: சேலம் அய்யந்திருமாளிகையில் நவீன வசதிகளுடன் ₹2.50 கோடியில் அறிவுசார் ஆய்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் இறுதிகட்டப்பணிகள் மும்முரமாக நடக்கும் நிலையில், விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபின், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வருகிறார். அந்தவகையில் நூலகத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையம், ஆய்வு மையங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அஸ்தம்பட்டி மண்டலம் 7வது வார்டு அய்யந்திருமாளிகை துவக்கப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மையம் அமைக்க ₹2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு, அறிவுசார் ஆய்வு மையம் கட்டும் பணி கடந்த ஓராண்டாக நடந்தது. தற்போது, அறிவுசார் மையம், ஆய்வு மையம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இம்மையம் தரைதளம், முதல் தளம் என 2 தளங்களை கொண்டுள்ளது. தரை தளத்தில், 60 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 10 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், நூலகர் அறை, கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, மேலாளர் அலுவலகம், இருப்பு அறை ஆகியவை அமைந்துள்ளது. முதல் தளத்தில், 35 நபர்கள் அமரக்கூடிய வாசிப்பு அறை, 5 எண்ணிக்கை கொண்ட கணினி மையம், 30 நபர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மையத்தின் சிறப்பு அம்சங்களாக 2 எண்ணிக்கையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 16 எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமரா, 2 எண்ணிக்கையில் 75 இஞ்ச் எல்.சி.டி., டிவி, 2 புரஜெக்டர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான மைக் மற்றும் சுவர் ஒலி பெருக்கிகள், புத்தக அலமாரிகள், சைகை மொழி பேனல்கள், அபாகஸ் உபகரணங்கள், டிக்டாக் டோ உபகரணங்கள், கண்ணாடி பிரம்மை உபகரணங்கள், தளவாட பொருட்கள், மையத்திற்கு வெளியில் அமற்வதற்கான இருக்கைகள் போன்ற அனைத்து சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த அறிவுசார் மையத்தில் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடக்கிறது.

விரைவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவுள்ளார். அதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறிவுசார் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, இம்மையம் மிக சிறப்பாக வந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நன்கு பயன்படுத்துவார்கள் என அதிகாரிகளிடம் கூறினார். இந்தஆய்வின்போது, கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், துணைமேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கம், மாநகராட்சி ஆணையாளர் (பொ) அசோக்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந் ஆகியோர் உடனிருந்தனர்.

The post சேலம் அய்யந்திருமாளிகையில் நவீன வசதிகளுடன் ₹2.50 கோடியில் அறிவுசார் ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: