கடற்கரை ரயில் நிலையத்தில் பயணியை கத்தியால் கிழித்து பணம், செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

தண்டையார்பேட்டை: கடற்கரை ரயில் நிலையத்தில் போதையில் இருந்த பயணியை கத்தியால் கிழித்து பணம், செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகின்றன. அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை கடற்கரை வழியாக எழும்பூர் ரயில் நிலையம் செல்கிறது.

இதனால், எப்போதும் கடற்கரை ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இங்கு மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இரவில் அங்குள்ள 2வது நடைமேடையில் போதையில் இருந்த ஒருவரை, 4 மர்ம நபர்கள் கத்தியால் முகத்தில் கிழித்து, அவரிடம் இருந்த ₹2,000, செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதைப் பார்த்த சக பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரயில்வே போலீசார் காயமடைந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், தாக்கப்பட்டவர் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி (47) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கடற்கரை ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கடற்கரை ரயில் நிலையத்தில் பயணியை கத்தியால் கிழித்து பணம், செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: