சென்னை: மெரினாவில் இருந்து பறக்கும் ரயிலில் வந்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூரைச் சேர்ந்த குரு சந்திரன் என்பவரின் மகள் மோனிஷா (24). இவர் நேற்று முன்தினம் காலை சென்னை மெரினா கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு கடல் தண்ணீரிலும் மணற்பரப்பிலும் நண்பர்களுடன் விளையாடினார். பின்னர் மோனிஷா கடற்கரையில் விற்கப்பட்ட பானிப்பூரி, சுண்டல், சோளம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. இதையடுத்து மீண்டும் மெரினாவில் அப்படியே சுற்றி பார்த்துவிட்டு பறக்கும் ரயில் நிலையத்திற்கு நண்பர்களுடன் வந்து, வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஏறியுள்ளார்.
இவர்கள் திருவான்மியூருக்கு சென்றுள்ளனர். ரயில் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போதே திடீரென மோனிஷா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து மோனிஷாவின் நண்பர்கள் பதறியுள்ளனர். மோனிஷாவுடன் இருந்த தோழி ஒருவர் செவிலியர் என்பதால் முதலுதவி செய்துள்ளார். ஆனாலும் அவர் மயக்க நிலையில் இருந்ததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவர் பாதி வழிலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது பறக்கும் ரயிலில் நடந்த விவகாரம் காரணமாக திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோனிஷாவின் உறவினர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர், மெரினா கடற்கரையில் மோனிஷா சாப்பிட்ட பானி பூரி, சுண்டல், மக்காச்சோளம் ஆகியவற்றால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததா, இல்லை வேறு ஏதேனும் காரணமா, என்ற கோணத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆனாலும், உடற்கூராய்வு முடிவுக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு மின்சார ரயிலில் வந்த இளம்பெண் திடீரென ரத்த வாந்தி எடுத்து மரணம்: மயிலாப்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.