சென்னை துறைமுகம் –மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலைக்காக கூவம் ஆற்றில் உள்ள தூண்கள் விரைவில் அகற்றப்படும்: சென்னை துறைமுக ஆணையர் சுனில் பாலிவால் தகவல்

சென்னை: சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை கட்டப்பட்ட உள்ள ஈரடுக்கு உயர்மட்ட சாலைப்பணிக்காக கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தூண்கள் உறுதித்தன்மை இல்லாத காரணத்தால் விரைவில் அகற்றப்பட உள்ளதாக சென்னை துறைமுகம் ஆணையர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுகம் அலுவலகத்தில் புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து சென்னை துறைமுகம் ஆணையர் சுனில் பாலிவால் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: கடந்தாண்டு 38 ஆயிரம் வாகனங்கள் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை துறைமுகத்திலிருந்து சுண்ணாம்பு கற்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதன் காரணமாக ஏற்றுமதியில் சிறிய சுனக்கமும், இழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும், கப்பல்களுக்கு தேவையான ஆற்றல்களை நாங்களே உருவாக்கிக்கொள்கிறோம். குறிப்பாக, எங்களுடைய துறைமுகம் மூலம் 300 கி.வாட் சூரிய சக்தி உற்பத்தியை செய்துக்கொள்கிறோம். உலகம் முழுவதும் நிலக்கரியை தவிர்த்து வருகிறது என்பதை நாங்கள் அறிவோம். தற்போதைய காலச்சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று எரிசக்தியை நோக்கி உலகம் சென்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான பல்வேறு வியூகங்கள் எங்களிடம் உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியில் சரக்கு கையாளுவதில் நிலக்கரிக்கு மாற்றாக ஆட்டோமொபைல், காற்றாலை உதிரி பாகங்கள் மற்றும் லித்தியம் பேட்டரி உள்ளிட்ட பொருள்களுக்கு வருங்காலங்களில் முக்கியத்துவம் வழங்கப்படும்.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக எண்ணெய் இறக்குமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குரூஸ் கப்பல்களை போல சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சொகுசு கப்பல்களின் பயணங்கள் அதிகரித்துள்ளது. குரூஸ் கப்பல்களுக்கான முனையம் அமைப்பதற்கான திட்டமிடுதலில் ஈடுபட்டுள்ளோம். தற்போது வரை சரக்குகளை கையாளுவதில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். அதேபோல, ரூ.6,076 கோடி மதிப்பீட்டில் அமையுள்ள சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலைக்கான ஒப்பந்த புள்ளிகள் ஏப்.6ம் தேதி திருத்தப்படுகிறது. ஈரடுக்கு உயர் மேம்பாலத்திற்காக சென்னை கோயம்பேடு – துறைமுகம் இடையே ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்களின் உறுதி தன்மையை பரிசோதனை செய்தோம். அதில் கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தூண்கள் உறுதி தன்மை இழந்துள்ள நிலையில் அதனை விரைவில் அகற்ற திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

₹1000 கோடி வருவாய்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கடந்தாண்டு (2022-23) ரூ.1000 கோடி அளவிற்கு வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளோம். எனவே, நடப்பாண்டில் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகத்திலிருந்து 100 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை துறைமுகத்திற்கும் 53 மில்லியன் டன், காமராஜர் துறைமுகத்திற்கு 47 மில்லியன் டன் நிர்ணயித்துள்ளோம், என சென்னை துறைமுக ஆணையர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.

The post சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலைக்காக கூவம் ஆற்றில் உள்ள தூண்கள் விரைவில் அகற்றப்படும்: சென்னை துறைமுக ஆணையர் சுனில் பாலிவால் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: