தர்மபுரி சிப்காட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்

தர்மபுரி: தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறினார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ரூ.7.30 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று தொடங்கி வைத்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரியில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகளில் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பில், சிப்காட் நுழைவாயில் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் அமைப்பதற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சிறு,குறு தொழிற்சாலைகள் இங்கு அமைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 2 முதல் 3 ஆண்டுகளில் இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைக்கப்படும். எதிர்காலத்தில் தர்மபுரி மாவட்டம், ஓசூர் கண்டுள்ள தொழில் வளர்ச்சியை அடையும்.

ரூ.4500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பகுதி-2, தற்போது மறு மதிப்பீடு செய்து ரூ.7000 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் என்று, தமிழக சட்டமன்ற தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.42 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒகேனக்கல் சுற்றுலா தள மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் சிறுதானியங்கள் பயிரிடுவதில், தர்மபுரி மாவட்டம் முக்கிய இடத்தில் உள்ளது.

வனப்பகுதியில் இருந்து தண்ணீர், உணவு தேடி வரும்போது, மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்க, தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை சீர் செய்ய, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒருகிலோ ரூ.22 என இருந்த ராகி இப்போது ரூ.38 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. இவ்வாறு அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறினார். பேட்டியின் போது, கலெக்டர் சாந்தி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

The post தர்மபுரி சிப்காட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: