நாகை மாவட்டத்தில் போதிய விளைச்சல் இருந்தும் போதிய விலை கிடைக்காமல் வெள்ளரி விவசாயிகள் கவலை: கொரோனா பரவலால் பாதிப்பு

நாகை: போதிய அளவு விளைச்சல் இருந்தும் கொரோனா வைரஸ் தொற்றால் உரிய விலை கிடைக்காமல் நாகை மாவட்டத்தில் வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கஜா புயல் தாக்கத்திற்கு பின்னர் நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு வெள்ளரி நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. 3 மாத பயிரான வெள்ளரி நாகை மாவட்டத்தில் தெற்கு பொய்கைநல்லூர், பிரதாபராமசிம்மபுரம், வடக்கு பொய்கைநல்லூர், கீழையூர், கீழ்வேளூர், வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும். மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு குறைவாக இருந்தாலும் சிறந்த பணப்பயிர் ஆகும். நாகை மாவட்டத்தில் இருந்து சாகுபடி செய்யப்படும் வெள்ளரிக்கு தண்ணீர் சத்து அதிகமாக இருப்பதால் மற்ற இடங்களில் விளையும் வெள்ளரியை விட நாகை மாவட்டத்தை சுற்றி விளையும் வெள்ளரிக்கு தனி மவுசு உண்டு.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போதுமான விலை தான் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பொய்யூர் பகுதியை சுற்றி விளையும் வெள்ளரி காய்களுக்கு வியாபாரிகள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும். காரணம் இந்த பகுதியில் விளையும் வெள்ளரிக்கு நீர் சத்து அதிகம் இருக்கும். அதே நேரத்தில் நாகையை சுற்றி அதிக அளவில் சுற்றுலாதலங்கள் இருப்பதால் கோடைகாலங்களில் சுற்றுலா வரும் பயணிகள் அதிக அளவில் வெள்ளரி வாங்கி சாப்பிடுவார்கள். கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட வெள்ளரி கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரூ.20க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் அதிக அளவில் ஏற்றுமதியாகும் வெள்ளரி தற்போது குறைந்து விட்டது.

இதனால் வயல்களிலேயே வெள்ளரியை பழுக்க வைத்து வெள்ளரி பழமாக உள்ளூர் பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. போதிய அளவு விளைச்சல் உள்ளது. ஆனால் வாங்கி செல்ல வியாபாரிகள் தான் இல்லை. சாகுபடி செய்து 3 மாத காலத்திற்குள் அறுவடை செய்யவில்லை என்றால் காய் வீணாக தான் போகும். எனவே வேறு வழியில்லாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

Related Stories: