கடற்கரை பகுதியில் இறால் பண்ணை அமைக்க அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை : கடலோர மீன் வளர்ப்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கடற்கரைப் பகுதியில் இறால் பண்ணைகளை அனுமதிக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த ஐகோர்ட் கிளை, கடலோர  மீன் வளர்ப்பு ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜோசப், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடல் வளம் மற்றும்  கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கடற்கரை உயர் அலை கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள் இறால் பண்ணைகள்,  மீன் குஞ்சுகள் வளர்த்தல் போன்றவைக்கு தடை இருந்தது.

ஆனால், கடந்த மார்ச் 5ல் வெளியான அறிவிப்பாணைப்படி உயர் அலைக் கோட்டில்  இருந்து 200 மீட்டருக்குள் இறால் பண்ணைகள் மற்றும் மீன் வளர்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல்வளம் பாதிக்கும். இறால்  பண்ணை கழிவுகளும், வேதிப்பொருட்களும் கடலில் கலக்கும். இதனால் கடல் வளம் குறைந்து கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும்.  எனவே, மார்ச் 5ல் வெளியான அறிவிப்பாணைக்கு தடை விதிக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் மார்ச் 5ல் வெளியான அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை  விதித்தனர். மேலும் மனுவிற்கு, கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்தின் உறுப்பினர் - செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  தள்ளி வைத்தனர்.

Related Stories: