மத்திய அரசுக்கு பரிந்துரை 150 மாவட்டத்தில் முழு ஊரடங்கு

புதுடெல்லி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை, மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இதனால் ஏற்படும் தினசரி பாதிப்பும், பலியும் எதிர்பாராத அளவுக்கு மிக அதிகமாக இருப்பதால், அதை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாமல் தவிக்கின்றன. மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களும், பலியாவோர் எண்ணிக்கையும் கடுமையாக இருக்கிறது.  தினசரி பாதிப்பு 3.6 லட்சத்தை நேற்று கடந்தது. அதேபோல், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு பலியும் 2 லட்சத்தை கடந்தது. ஏற்கனவே, அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பல மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்குகளும்,   முக்கிய கட்டுப்பாடுகளும்  விதிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்திலும், திரையரங்குகள், வணிக வளாகங்கள், 3 ஆயிரம் சதுரடிக்கு மேற்பட்ட பெரிய கடைகள், நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்நிலை  குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த  மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், ‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு  15 சதவீதத்துக்கும் மேலாக உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம். இதன் மூலம்,  கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும்.

முழு ஊரடங்கு அமல்படுத்தினால் இந்த மாவட்டங்களில்  அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகளை மட்டும் திறக்க அனுமதிக்கலாம்,’ என பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி பிறகு, பிரதமர் மோடி ஒரு நாட்களில் இறுதி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 150 மாவட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த பல மாவட்டங்களின் பெயர்களும் இடம் பெற்று இருக்கிறது.

Related Stories: