செங்கல்பட்டு அதிமுக பிரமுகர் கொலை வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நண்பர் சரண்: கூலிப்படை தலைவனுக்கு வலை

திருச்சி: செங்கல்பட்டு அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நண்பர் நேற்று சரணடைந்தார். செங்கல்பட்டு மறைமலைநகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் மாறன் (எ) திருமாறன்(55). தேமுதிக மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். தற்போது, அதிமுக பிரமுகராக இருந்து வருகிறார். இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.  இந்நிலையில் நேற்றுமுன்தினம் தனது திருமண நாளை முன்னிட்டு, மனைவியுடன் மறைமலைநகரில் உள்ள முத்துக்குமாரசாமி கோயிலுக்கு சென்றார். அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அப்போது, பைக்கில் வந்த 4 பேர் கும்பல், திருமாறன் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசியது. இதில் திருமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது அவருக்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸ் எழிலரசன், தனது துப்பாக்கியால் 6 ரவுண்டு சுட்டதில் குண்டு வீசிய திருவள்ளூர் அடுத்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் இறந்தார். திருமாறனின் கார் டிரைவர் சுரேஷ் மற்றும் சாமி தரிசனம் செய்ய வந்த பாபு மனைவி புவனேஷ்வரி ஆகியோர் காயமடைந்தனர்.

மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருமாறனும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷும்(48) தொழிற்சாலைகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழிலை தொடங்கியுள்ளனர். நல்ல வருமானம் கிடைத்ததால், திருமாறன் தனியாக இந்த தொழிலை செய்தார். இதனால் போட்டி ஏற்பட்டது. அதனால் திருமாறனை தீர்த்துகட்ட ராஜேஷ் முடிவு செய்தார். அதேநேரத்தில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு ஆட்களை சப்ளை செய்வது, பழைய இரும்பு பொருட்களை எடுப்பது சம்பந்தமாக ரவுடி வைரவனுக்கும், திருமாறனுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வைரவனின் உதவியை நாடியதாகவும், அதனால் மறைமலைநகரை சேர்ந்த மகேஷ் தலைமையில் கூலிப்படையை வைத்து கடந்த ஒரு மாதமாக நாட்டு வெடிகுண்டு வெடிப்பது குறித்து பயிற்சி அளித்து இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதற்காகவே சில தினங்களுக்கு முன் ராஜேஷ், மலேசியாவில் இருந்து வந்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்க 4 டிஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 14 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருச்சி 2வது நீதித்துறை நடுவர் முன்னிலையில் ராஜேஷ் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: