பரபரப்பான சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தியது டெல்லி

சென்னை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ்  அணி சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது.  பிரித்வி, தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் முதல் 3 பந்துகளையும் பிரித்வி பவுண்டரிக்கு விரட்டி மிரட்டினார். பிரித்வி - தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 81 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. பிரித்வி 32 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். தவான் 28 ரன் (26 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ரஷித் சுழலில் கிளீன் போல்டாக, பிரித்வி 53 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார்.

பன்ட் 37 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட்மயர் 1 ரன் எடுத்து கவுல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. ஸ்மித் 34 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் கவுல் 2, ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். அறிமுக சுழல் சுசித் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவரில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது. வில்லியம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோனி பெர்ஸ்டோ 38 ரன் (18 பந்து 3  பவுண்டரி,4 சிக்சர்) கேதர் ஜாதவ் 9 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில்  ஆவேஷ்கான் 3 விக்கெட், அக்‌ஷர் படேல் 2, அமித்மிஸ்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.  இதை தொடர்ந்து சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் டெல்லியின் அக்‌ஷர் படேல் வீசிய ஓவரில் வார்னர், வில்லியம்சன் இணைந்து 7 ரன் மட்டுமே எடுத்தனர். அடுத்து டெல்லி சார்பில் களம் இறங்கிய பந்த், தவான் இணைந்து 6 பந்தில் 8 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

Related Stories: