கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ; ஈராக்கில் 82 பேர் பலி

பாக்தாத்: ஈராக்கில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 82 கொரோனா நோயாளிகள் கருகி இறந்தனர். ஈராக் நாட்டு தலைநகரான பாக்தாத்தில் இப்ன் அல் கதீப் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கொரோனா 2ம் அலை காரணமாக இங்கு நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் பெருமளவில் குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததால் 2ம் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு படை வருவதற்குள் 82 நோயாளிகள் கருகி பலியாகினர்.

இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவார்கள். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததால், 200 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே நேரம், தீ விபத்தில் 110 நோயாளிகள் படுகாயமடைந்து உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய அளவில் நடந்த இந்த தீ விபத்தால், ஈராக் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இது பற்றி ஆலோசிப்பதற்காக அவசர கூட்டத்தை கூட்டிய பிரதமர் முஸ்தபா அல் கதிமி, ‘‘இது அலட்சியம் காரணமாக ஏற்பட்ட தவறு இல்லை. 82 பேர் பலியானதை குற்றமாகவே கருத வேண்டும். இந்த சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து  24 மணி நேரத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: