சின்னசேலம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் கூட்டமாக கூடும் மக்கள்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சின்னசேலம் : கச்சிராயபாளையம், சின்னசேலம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் கூட்டமாக கூடும் மக்களை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் மிக வேகமாக இரண்டாம் கட்ட கொரோனா தொற்று பரவல் இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை 11,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது சிகிச்சையில் 488 பேர் உள்ளதாக தெரிகிறது. மேலும் இதுவரை கடந்த ஓராண்டில் சுமார் 108 பேர் இறந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும் இது குறைவுதான் என்றாலும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தடுப்பு, நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனால், சின்னசேலம் தாலுகாவில் உள்ள சின்னசேலம், கச்சிராயபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் கட்டுப்பாடுகளை அறிவித்த போதிலும் கூட்டம் குறைந்தபாடில்லை.

குறிப்பாக கச்சிராயபாளையம் பஸ்நிலைய பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி கடைகளில் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் கூட்டமாக நிற்கின்றனர். நேற்று முன்தினம் கூட கச்சிராயபாளையம் பஸ்நிலைய பகுதியில் உள்ள பிரியாணி கடையில் ஆஃபர் என்ற பெயரில் முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் 100க்கும் மேற்பட்டோர் வரிசை கட்டி நிற்கும் நிலை இருந்தது. இதை கட்டுப்படுத்த எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை. இதனாலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் பேரூராட்சி துறையும், சுகாதாரத்துறையும் கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிப்பதில் தயக்கம் காட்டுகின்றன. அதேபோல காவல் துறையினரும் முகக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி துறையினருடன் இணைந்து கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: