விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 150 டன் ஆக்சிஜன் ரயிலில் அனுப்ப ஏற்பாடு

திருமலை : விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 150 டன் ஆக்சிஜன் ரயிலில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, விசாகப்பட்டினம் கலெக்டர் வினய்சந் தெரிவித்திருப்பதாவது: கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது உடனடியாக நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆக்சிஜன் விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலையில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையின் மூலம் ஆந்திராவிற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுகிறது. மேலும், அண்டை மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு உத்தரவுப்படி ஆக்சிஜன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கு மத்திய மற்றும் மாநில அரசு விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலையை சார்ந்துள்ளது.  ஆந்திராவில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் இரட்டிப்பு அளவிற்கு நிலுவை வைத்திருக்கும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  ஒவ்வொரு எக்கு தொழிற்சாலையிலும் ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கான் மற்றும் வாயுக்களை எக்கு உற்பத்திக்கு பயன்படுத்துவது வழக்கம். காற்றில் 20.6 சதவீத ஆக்சிஜன், 78.5 சதவீதம் நைட்ரஜன் மற்றும் 0. 93 சதவீதம் கரிம வாயுக்கள் உள்ளன. இதில்  மைனஸ் 183 டிகிரி செல்சியசில், ஆக்ஸிஜன் சேகரிக்கப்பட்டு  பிரிக்கப்படுகிறது. அந்த வரிசையில் விசாகப்பட்டினம் எக்கு ஆலை 100 முதல் 150 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.

இந்த தொழிற்சாலையில் மொத்தம் ஐந்து ஆக்சிஜன் பிளாண்ட்   மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 2,800 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது. மத்திய அரசு உத்தரவின்படி கொரோனா நோயாளிகளுக்காக திரவ ஆக்சிஜனை கூடுதல் உற்பத்தி செய்ய விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் உள்ள மருத்துவமனை தேவைகளுக்காக மாநில அரசு கேட்டு கொண்டதற்கிணங்க தினந்தோறும் 100 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதே  சூழலில் கடந்த ஆண்டு விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் இருந்து எட்டாயிரம் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

சமீபத்தில், மகாராஷ்டிராவில் கொரோனா  நோயாளிகளுக்காக விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் இருந்து 150 டன் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக விசாகப்பட்டினம் வந்துள்ள ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 150 டன் ஆக்சிஜனை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: