ராஜஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: படிக்கல்லுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது..! பெங்களூரு கேப்டன் விராட்கோஹ்லி பாராட்டு

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த 16வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற  பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில், 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 32 பந்தில், 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன் எடுத்தார். ராகுல் திவாதியா 23 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன் அடித்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 21, ஜோஸ் பட்லர் 8, மனன் வோரா 7, டேவிட் மில்லர் 0, பராக் 25, கிறிஸ் மோரீஸ் 10 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பெங்களூரு தரப்பில், முகமது சிராஜ் 3, ஹர்சல் பட்டேல் தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி-தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினர். படிக்கல் 51 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் அடித்தார்.

ஐபிஎல்லில் அவருக்கு இது தான் முதல் சதம். இவர்களை பிரிக்க ராஜஸ்தான் வீரர்கள் கடுமையாக் போராடியும் கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 16.3 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்த பெங்களூரு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. படிக்கல் 101, விராட் கோஹ்லி 72 (47 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்னில் களத்தில் இருந்தனர். 4வது வெற்றியை பெற்ற பெங்களூரு 8 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் 3வது தோல்வியுடன் கடைசி இடத்தில் தொடர்கிறது. தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் விருதுபெற்றார். வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் விராட்கோஹ்லி கூறியதாவது: படிக்கல்லின் ஒரு சிறந்த இன்னிங்ஸ் இது. கடந்த முறையும் அவர் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. டி.20 போட்டி கூட்டு பேட்டிங் பற்றியது. நான் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருக்க முடியும்.

இளம்வீரர் அடித்து ஆடும்போது அவருக்கு வாய்ப்பு அளிப்பது முக்கியம். நான் எனது விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டேன். அவர் என்னை சதம் அடிக்க சொன்னார். நான் முதலில் அவரை அதை பெறச் சொன்னேன். அவர் சதம் அடிக்க தகுதியானவர். இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். எங்களிடம் பந்துவீச்சில் தனித்துவமான வீரர்கள் இல்லை. ஆனால் பயனுள்ள வீரர்கள் உள்ளனர். எங்கள் பந்துவீச்சில் ஆழம் உள்ளது. இந்த சீசனில் நாங்கள் டெத் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளோம். இது நாம் பெருமை கொள்ளவேண்டிய ஒன்றாகும். இன்று பவுலர்கள் 30, 35 ரன்களை கட்டுப்படுத்தினர்.

நாங்கள் சரியான திசையில் செல்கிறோம், என்றார். ஆட்டநாயகன் தேவ்தத் படிக்கல் கூறியதாவது: இது எனது சிறந்த இன்னிங்ஸ். இதற்காக தான் காத்திருந்தேன். நான் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்தபோது இங்கு வந்து விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முதல் போட்டியை தவறவிட்டது என்னை மிகவும் காயப்படுத்தியது.  பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. நான் நூறு ரன்னை நெருங்கிய போது பதற்றம் அடையவில்லை. அதற்காக நான் விராட்டிற்கு நன்றி சொல்ல வேண்டும். என்னை பொறுத்தவரை சதத்தை விட அணியின் வெற்றிக்கு பங்களிப்பதுதான் முக்கியம், என்றார்.

பேட்டிங் பற்றி மறுஆய்வு தேவை

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ``நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் நல்ல ஸ்கோரை பெற்றது சிறப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் நன்றாக ஆடி விக்கெட்டை இழக்காமல் வெற்றிபெற்று விட்டனர். நாங்கள் சில வீட்டுப்பாடங்களைச் செய்ய வேண்டும், எங்கள் பேட்டிங்கைப் பற்றி நேர்மையான மறுஆய்வு தேவை. என்ன தவறு நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நேரம் தேவை, நாங்கள் நன்றாக வருவோம் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற தோல்வி வீரர்களைத் தாழ்த்துகிறது, ஆனால் அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்து சிறப்பாக வெளியே வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: