ஊரணியை ஆக்கிரமித்து கட்டிடம்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை சந்தைப்பேட்டை ஊரணி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை மையப் பகுதியில் அமைந்துள்ளது சந்தைப்பேட்டை ஊரணி சுமார் 4 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரணியில் சந்தைக்கு வரும் ஆடு, மாடுகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. இப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களும் இந்த ஊரணி தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

காலப்போக்கில் ஊரணியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு குடிநீர் ஊரணியாக இருந்தது, குளிக்கும் ஊரணியாக மாறியது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் இந்த ஊரணி தண்ணீரை செலவுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஊரணியின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் குடியிருப்போர் ஊரணி கரைப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விரிவாக்கம் செய்து விட்டனர். மேலும் ஏராளமான கழிப்பறைகளை கட்டி விட்டனர். இதனால் இந்த ஊரணிக்கு கரையை இல்லாமல் போய் விட்டது. எனவே இந்த ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருவாடானை பொதுமக்கள் கூறுகையில், மிகவும் பழமை வாய்ந்த இந்த சந்தைப்பேட்டை ஊரணி வெளியூரிலிருந்து வரும் கால்நடைகளுக்கும் பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

காலப்போக்கில் அதிகாரிகளின் ஆதரவோடு இந்த ஊரணி கரையில் பலர் பட்டா வாங்கி விட்டனர். மேலும் ஆக்கிரமித்து குளியலறையும் கழிப்பறையும் கட்டி விட்டனர். பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. உயர் நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு வழக்குகளில் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊரணி ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: