குமரி மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: ‘கொரோனா’வால் அவதிப்படும் மக்கள் மேலும் பாதிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளால் அவதிப்படும் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ₹1000 விநியோகம் செய்யப்பட்டது. மேலும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வீடுகளில் முடங்கிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏழை மக்கள் ரேஷன்கடைகள் வாயிலாக விநியோகம் செய்யப்படுகின்ற ரேஷன் அரிசியை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் கொரோனா வேளையில் ரேஷன்கடைகளில் கூடுதல் அரிசி விநியோகம் செய்யப்பட்டது.

ஓரிரு மாதங்கள் அதில் இருந்து சற்று மேம்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கறுப்பு, பழுப்பு, சிகப்பு நிறத்தில் காணப்படும் இந்த அரிசியை வாங்கி சமைக்கும் மக்கள் அதில் இருந்து வீசும் துர்நாற்றத்தாலும், உண்ணுவதற்கு உகந்ததாக இல்லாததாலும், செரிமான கோளாறு பிரச்னைகளாலும் அவதிப்படுகின்றனர். பலரும் அதனை உண்ண முடியாமல் நாய்களுக்கும், கோழிகளுக்கும் உணவாக போடும் அவலம் தொடர்கிறது. மேலும் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு இதே போன்ற ரேஷன் அரிசிதான் தொடர்ந்து வழங்கப்படும் என்று ரேஷன்கடைகளில் கூறி வருகின்றனர்.

வெளிச்சந்தையில் ஓரளவு தரமான அரிசி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் விநியோகம் செய்யப்படுவது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது. கொரோனா வேளையில்  கூடுதல் அளவில் கொடுக்கப்பட்ட ரேஷன் அரிசியும் இதுபோன்று தரமற்ற முறையில் வழங்கப்பட்டதால் பல வீடுகளிலும் இப்போதும் அந்த அரிசி மூடைகளில் இருப்பு வைக்கப்பட்டு அவற்றில் புழு, பூச்சிகள், வண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.

நாகர்கோவில் நகர பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வழியாக செயல்படுகின்ற ரேஷன்கடைகள் மற்றும் கிராமப்புறங்களில் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விநியோகம் செயல்படுகின்ற ரேஷன் கடைகளிலும் ஒரு சேர  தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எந்த பயனும் இல்லை. தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற அரிசி தரமற்ற முறையில் கொள்முதல் செய்து மூட்டை கட்டி அனுப்பி வைக்கப்படுவதாகவும், எனவே அரசே மோசமான நிலையில் உள்ள அரிசியை திரும்ப பெற்று தரமான அரிசி ரேஷன்கடைகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் ரேஷன் கடையில் இதனை போன்று தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நாகர்கோவில் மாநகர நிர்வாகி ஐயப்பன் குற்றம் சாட்டினார். குமரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் மாவட்டத்தில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்  கோரிக்கை வைத்தார்.

குமரியில் 19.23 லட்சம் மக்களுக்கு ரேஷன்

குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 733 அரிசி கார்டுகள், 62 ஆயிரத்து 608 அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன்கார்டுகள், 2187 சீனி கார்டுகள், எந்த பொருட்களும் வேண்டாம் என்ற நிலையில் உள்ள 239 ரேஷன்கார்டுகள், 1786 போலீஸ் ரேஷன் கார்டுகளும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் 6தாலுகாக்களிலும் சேர்த்து 764 ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

5 லட்சத்து 53 ஆயிரத்து 769 ரேஷன்கார்டுகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றது.19 லட்சத்து 23 ஆயிரத்து 659 பேர் ரேஷன்கார்டுகளில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம் அரிசி, கோதுமை மற்றும் துவரம் பருப்பு, பாமாயில், சீனி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன்கடைகள் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது.

Related Stories: