ஹாட்ரிக் தோல்வியால் நெருக்கடி மும்பையை வீழ்த்தி முன்னேறுமா பஞ்சாப்

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று சென்னையில் நடக்கும் 17வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றுள்ளது. முதல் ஆட்டத்தில் அசத்தலாக ரன் குவித்து, கடைசிவரை போராடி ராஜஸ்தானை வீழ்த்தியது. அதன்பிறகு நடந்த 3 ஆட்டங்களில்  சென்னை, டெல்லி, ஐதராபாத் அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றுள்ளது.  அதனால் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கின்க்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இத்தனைக்கும் அணியில்  ராகுல், மயாங்க், கேல், ஷமி,  ஹூடா, அஷ்தீப் சிங்,  தமிழக வீரர்கள் முருகன் அஷ்வின், ஷாருக்கான்  ஆகியோர் சிறப்பாக விளையாடி அசத்தினாலும் பலன் இல்லை. பூரன், ஹெட்மயர் என மாற்றிமாற்றி இறக்கியும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஜை ரிச்சர்ட்சன், ரைலி மெரிடித் ஆகியோரை ஓரங்கட்டியும் ஒன்றும் நடக்கவில்லை. புதிதாக களம் கண்ட பேபியன் ஆலன், மோய்சஸ் ஹென்ரிக்ஸ் அடுத்த வாய்ப்பில் அசத்தக் கூடும். கடைசி இடத்தில் இருந்து முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் பஞ்சாப் கிங்ஸ் களம் காண்கிறது.

அதே சமயம், நடப்பு சாம்பியன் மும்பை விளையாடிய 4 ஆட்டங்களில் தலா 2 வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது. கிடைத்த வெற்றிகளும் தட்டுத்தடுமாறி கிடைத்தவை தான். கேப்டன் ரோகித் பொறுப்புடன் விளையாடுவதை போல் டி காக், சூர்யகுமார், இஷான் ஆகியோரும் அவ்வப்போது ஆடுகின்றனர். பந்து வீச்சில்  பும்ரா, போல்ட், ராகுல் சாஹர் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்தாலும் மும்பைக்கும் வெற்றி அவசியம். இன்னும் ஆட வேண்டிய போட்டிகள் அதிகம் இருந்தாலும், இனி பெறும் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம் என்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதுவரை மோதியதில்...

ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள்  26 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் மும்பை 14, பஞ்சாப் 12ல் வென்றுள்ளன. இந்த அணிகள் ஒருமுறை கூட பிளே ஆப், நாக் அவுட் சுற்றுகளில் மோதியதில்லை. கடந்த ஆண்டு நடந்த ஒரு லீக் போட்டியில் சூப்பர் ஓவரும் சரிசமனில் முடிய, பஞ்சாப் 2வது சூப்பர் ஓவரில் அசத்தலாக வென்றது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  அதிகபட்சமாக பஞ்சாப் 230, மும்பை 223 ரன் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 119 ரன், மும்பை 87 ரன்னில் சுருண்டுள்ளது.

Related Stories:

>