‘குட்டி ஜப்பானை’ மீண்டும் குறிவைக்கிறது கொரோனா பட்டாசு உற்பத்தி பாதிக்குப்பாதி குறையும்?: வடமாநில ஆர்டர்கள் குறைவு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி ‘‘குட்டி ஜப்பான்’’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. வடமாநில வியாபாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு சில மாதங்களில் அடுத்த  ஆண்டுக்கான ஆர்டர்கள் வழங்கி முன்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆர்டாின்  பேரில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணியில் ஈடுபடுவர். இந்த  ஆண்டு வழக்கம்போல் வெளிமாநில வியாபாரிகள் ஆரம்பத்தில் அதிக ஆர்டர்களை  வழங்கி முன்பணம் கொடுத்தனர். இதனை நம்பி பட்டாசு ஆலை உரிமையாளர்கள்  உற்பத்தி பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு  மாதமாக கொரோனா 2ம் அலை நாடு முழுவதும் வேகமெடுத்துள்ளதால், வடமாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், திருவிழாக்கள் ரத்து செய்யப்படுவதால்,  பட்டாசு  வியாபாரம் நடைபெறவில்லை.

வடமாநில வியாபாரிகள் பட்டாசு கொள்முதலை கடந்த  ஒரு மாதமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு ஆர்டர்களையும் 40 சதவீதம் வரையில் குறைத்து விட்டனர். இதனால்  சிவகாசி பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. ஆலைகள் உற்பத்தி பணியை பாதியாக குறைத்து விட்டது. இதேநிலை  தொடந்தால் இந்தாண்டு  தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி  பணியில் 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்கும் என ஆலை  உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனா பரவலால் பட்டாசு வியாபாரிகள் ஆர்டர்களை குறைத்துள்ளதால் தொழில் பாதிப்படைந்துள்ளது. வருடத்திற்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறும் பட்டாசு தொழிலில், இந்தாண்டு 40 சதவீத அளவுக்கு விற்பனை பாதிப்படையும் சூழல் நிலவுகிறது. பட்டாசு மூலப்பொருள், அட்டை, சணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தாண்டு பட்டாசு விலை 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.  வெளிமாநில வியாபாரிகள் ஆர்டர்களை பெருமளவில் குறைந்துள்ளதால் ஆலைகளில் பட்டாசுகள் ேதக்கமடைந்துள்ளது’’ என்றார்.

Related Stories: