சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்துவரும் நடிகையும், மாடல் அழகியுமான ரைசா வில்சன், முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு தனியார் சிகிச்சை மையத்தை அணுகியுள்ளார். அங்கிருந்த டாக்டரின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மார்ச் 25ம் தேதி போடாக்ஸ் சிகிச்சையை ரைசா எடுத்துக்கொண்டு, அதற்கு கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளார். பத்து நாட்களுக்கு பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ரைசா, மீண்டும் டாக்டரை அணுகியபோது, டெர்மா பில்லர்ஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. முதல் தடவையே ஏன் இந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றும், பணம் பறிப்பதுதான் நோக்கமா என்றும் ரைசா கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் ஏப்ரல் 16ம் தேதி ஆலோசனைக்கு பிறகு ஏப்ரல் 17ம் தேதியே டியர் ஃப்ரீ ஃபில்லர் சிகிச்சையை அந்த டாக்டர் அளித்துள்ளார். அதற்காக 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார்.