வௌ்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டுவண்டிகள் பறிமுதல்: மாடுகளை கோசாலைக்கு அனுப்ப எதிர்ப்பு : வாலிபர் மீது போலீசார் தாக்குதல்

அறந்தாங்கி: மணமேல்குடி அருகே வௌ்ளாற்றில் அனுமதியில்லாமல் மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை கோசாலைக்கு அனுப்ப  முயன்றபோது மாடுகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாடுகளை வாகனத்தில் இருந்து இறக்கியவரை போலீசார்  தாக்கினர்.மணமேல்குடியை அடுத்த சிறுவரை அருகே வௌ்ளாற்றில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 5 மாட்டுவண்டிகளை மாடுகளுடன் மணமேல்குடி  தாசில்தார் ஜமுனா தலைமையிலான வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நாகுடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்ட மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாடுகளை கும்பகோணத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை  எடுத்தனர்.

மாடுகளை கோசாலைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிந்த மாடுகளின் உரிமையாளர;கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்  நாகுடி காவல்நிலையத்திற்கு வந்து மாடுகளை கோசாலைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர்  செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் ஒரு லாரியில் மாடுகளை ஏற்றி கும்பகோணம் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.உடனே மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப பெண்கள் தங்கள் மாடுகளை கோசாலைக்கு அனுப்பக்கூடாது என போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலையூரைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் லாரியில் ஏற்றப்பட்ட மாடுகளை அவிழ்த்துவிட்டதாக கூறி,  அவரை போலீசார் குண்டுக்கட்டாக நாகுடி போலீஸ் நிலையத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் போலீசார் முத்துராமனை தாக்கியதாக  கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முத்துராமனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து மாடுகளை கும்பகோணம் கோசாலைக்கு அனுப்பும் முடிவை போலீசார் கைவிட்டு, நாகுடி காவல்நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக  கட்டி வைத்துள்ளனர். . நாகுடி காவல்நிலையத்தில் மணல் கடத்தலுக்கு உதவிய மாடுகளை கோசாலைக்கு அனுப்ப மாட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு  தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: