அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை

* இரவு 12 மணிக்குள் முடிவு வெளியிட திட்டம்

* தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடந்த இரண்டு நாட்களாக சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா பரவாமல் தடுப்பது மற்றும் தற்போது உள்ள பாதிப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு இருப்பதால் அது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக என்னென்ன விதிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு மேஜை அமைக்கும்போது 6 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அதன்படி, ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் குறைந்தபட்சம் 7 முதல் 10 அல்லது 14 மேஜைகள் போடுவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒரு சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண மேஜை போடும்போது அறையின் அளவு, வாக்காளர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளப்படும். மே 2ம் தேதி இரவு 12 மணிக்குள்ளாக வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க திட்டமிட்டு வருகிறோம். வாக்கு எண்ணும் நேரம் அதிகமானால் அனைவருக்கும் சிரமம் ஏற்படும். அதனால்தான் இரவு 12 மணிக்குள்ளாக முடிக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரக்கூடிய அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்வது சாத்தியமா, அப்படி சோதனை மேற்கொள்ள எத்தனை நாளுக்கு முன்னதாக பண்ண வேண்டும், இதற்கு வசதி உள்ளதா என்பது குறித்தும் சுகாதார துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு இருந்தால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரக்கூடியவர்கள் எப்படி வருவார்கள். அதனால் ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கன்டெய்னர், லேப்டாப் உள்ளிட்டவைகள் ஸ்டிராங் ரூம் அருகே வந்துள்ளது பற்றியும், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அறிக்கை வாங்கியுள்ளோம்.

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது கொரோனா பரவலை காரணம் காட்டி, வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைப்பது தொடர்பாக ஆலோசிக்கவே இல்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  தமிழகத்தில் மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமா?

தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, கொரோனா பரவலை தடுக்க வாக்கு எண்ணும் மேஜைகளை குறைக்கலாமா என்று நேற்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் (கலெக்டர்கள்) அந்தந்த மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் போட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதேபோன்று, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா தொற்று பரவலை தடுக்க வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரும் அனைத்து அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி ஏஜென்ட்கள் என அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன் 72 மணி நேரத்தில் (மூன்று நாட்களுக்கு முன்) கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யலாமா அல்லது பரிசோதனை செய்து கொள்ளாமலேயே உள்ளே அனுமதிக்கலாமா என்பது குறித்து இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுகிறது.

Related Stories: