கொல்லிமலையில் பொழுதுபோக்கு மையங்கள் மூடல்-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சேந்தமங்கலம் : கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லிமலையில் உள்ள பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.நாடு முழுவதும் கொரோனா 2வது  தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், மாசிலா அருவி, நம்ம அருவி, காட்சி முனையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளது.

பொதுவாக கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை இரும்பு கதவு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும், மாசிலா அருவி, நம்ம அருவி ஆகியவற்றுக்குச் செல்லும் பாதைகள், இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகவே, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. அடிவார பகுதியில் உள்ள காரவள்ளி சோதனைச்சாவடியில் வனத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள், சோதனைச்சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். நேற்று முதல் காரவள்ளி பஸ் நிறுத்தத்தில், சேந்தமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து, சுற்றுலா பயணிகள் மேலே செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர்வாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Related Stories: