திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு

பழநி:திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் மங்கையற்கரசி (26). எம்எஸ்சி, பிஎட் பட்டதாரி. திருமணமாகாதவர். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். நேற்று மங்கையற்கரசியை உடல்நிலை பாதித்ததாக கூறி, பழநி அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் கர்ப்பமாக இருந்ததும், சில மணி  நேரத்திற்கு முன்பு குழந்தை பெற்றதும் தெரிய வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி மங்கையற்கரசி உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மங்கையற்கரசியின் பெற்றோர் மற்றும் சகோதரர் காளிதாஸ் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மங்கையற்கரசி திருமணம் ஆகாமலே கர்ப்பமடைந்தார். இதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்ட பெற்றோர், 8 மாதத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. இதையடுத்து அவரது  தம்பி காளிதாஸ் குழந்தையின் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிவிட்டார். மங்கையற்கரசிக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் உதவியால் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: