சின்னாளபட்டியில் கணினி பழுது வரி கட்ட முடியாமல் மக்கள் திணறல்

சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கணினி பழுதால் வரி கட்ட முடியாமல் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து சென்றனர்.சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் வருடக்கணக்கு முடிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் வீடு, வீடாக சென்று வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டாதவர்கள் கட்ட ஏற்பாடு செய்தனர். அதன்பின் தேர்தல் அறிவிப்பு வந்ததால் பேரூராட்சி வரிவசூலை நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் நேற்று முதல் வரி வசூல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பொதுமக்கள் பலர் பேரூராட்சி அலுவலகம் வந்திருந்தனர்.

ஆனால் அலுவலகத்தில் வரிவசூல் செய்ய பயன்படுத்தப்படும் 2 கணிணியில் ஒன்று பழுதானதால் வரிவசூல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நீண்டநேரம் வரிசையில் நின்று வீட்டுவரி கட்ட கேட்டபோது, வீட்டுவரி கட்ட முடியாது, தண்ணீர் வரி மட்டும் கட்டுங்கள் என பேரூராட்சி பணியாளர்கள் சொன்னதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் கணினி சரிசெய்யப்பட்டு வீட்டுவரி வசூலிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும் பலர் வரி கட்ட முடியாமல் திரும்பி சென்றனர்.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் வரி கட்ட வந்த பொதுமக்களில் சிலர் முகக்கவசம் அணியாமல் வந்தனர். அப்போது பேரூராட்சி பணியாளர்கள் எச்சரித்த பின்பு கைக்குட்டையை எடுத்து முகத்தில் கட்டி கொண்டனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளே வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: