தீவிரமடையும் கொரோனா பரவல்!: தேர்தல் பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு..!!

கொல்கத்தா: கொரோனா பரவல் காரணமாக ராகுல் காந்தியை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தனது பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். மேற்குவங்கத்தில் 5 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள 3 கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் இந்தியாவில் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் கொரோனாவின் தாக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

இதையடுத்து, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை முழுமையாக ரத்து செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தனது பிரச்சார நேரத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இனிமேல் எந்த பொதுக்கூட்டங்களிலும் அவர் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்றும் பிரச்சாரத்தின் கடைசி நாளில் மட்டும் சில நிமிடங்கள் அவர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அவர் 30 நிமிடங்கள் மட்டுமே கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக-வின் முக்கிய தலைவர்கள் பலர் மேற்குவங்கத்தில் முகாமிட்டுள்ளனர். நாதியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதுவரை நடைபெற்ற 5 கட்ட தேர்தல்களில் மட்டும் பாஜக 122 இடங்களில் வெல்லும் என குறிப்பிட்டுள்ளார். தனது பொதுக்கூட்டத்தில் கூடிய மக்களை பார்க்கும் போது 200 தொகுதிகள் வரை பாஜக வெல்லும் என்று தான் நம்புவதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Related Stories: