நடிகர் விவேக் நிலைமைக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: மாநகராட்சி சார்பில் டிஜிபியிடம் புகார்

சென்னை: நடிகர் விவேக் நிலைமைக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று கூறி வரும் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை மாநகராட்சி சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது, நடிகர் விவேக், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதைதொடர்ந்து மறுநாள் திடீரென நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார்.இதற்கிடையே நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நடிகர் மன்சூர் அலிகான் அவரை பார்க்க தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் விவேக்குக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக தகவல் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே பரவி வருகிறது.

எனவே, மக்களிடையே விவேக் மரணம் குறித்து தவறான தகவல் பரப்பி வரும் நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து தகவல் பரப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் மாநகராட்சி அதிகாரிகள் டிஜிபி திரிபாதியிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். அதேபோல் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்படி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரை போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>