போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

அரக்கோணம்: அரக்கோணத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஷோபனா. இவர் கடந்த 1999ம் ஆண்டு காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதைதொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து அவரது மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்தது. இதையடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஷோபனா சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழில் 22 ஆண்டுகளாக அரசு பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆசிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories:

>