ஆம்பூர் அருகே 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யும் சாப்ட்வேர் இன்ஜினியர்: பிரத்யேக ஆப் மூலம் தக்காளி கிலோ 1 ரூபாய்க்கு விற்பனை

ஆம்பூர்: ஆம்பூர் அருகே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு கலக்கி வரும் சாப்ட்வேர் இன்ஜினியர், விளையும் காய்கறிகளை பிரத்யேக ஆப் மூலம் விற்கிறார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா பாலூர் ஊராட்சியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(65), விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் திருமால் (35), பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தார். கடந்த 2016ல் சொந்த கிராமத்திற்கு திரும்பி, தந்தை ராஜமாணிக்கம் உடன் இணைந்து ஒரு ஏக்கர் நிலம் மற்றும் குத்தகை எடுத்த 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய துவங்கினார். இயற்கை முறையிலான நாட்டு வகை காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.

இதில் நாட்டு கத்திரிக்காய், நாட்டுத்தக்காளி, பச்சை மிளகாய், நூக்கல், முள்ளங்கி, நாட்டு மக்காச்சோளம், முருங்கைக்காய், சுரைக்காய், பாகற்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், நாட்டு பப்பாளி பழம், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் கீரை வகைகள் உள்ளிட்டவைகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இயற்கை உரங்களை பயன்படுத்தி வருவதால் விளைச்சல் மிகுந்து காணப்படுவதுடன் காய்கறிகள் மிகுந்த சுவையுடனும், தரமாக இருப்பதாகவும் அப்பகுதியினர் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருமால் கூறுகையில், இயற்கை உரமாக வேப்பம் புண்ணாக்கு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஆகியவற்றை ஒன்றாக அரைத்து மாட்டு கோமியத்தை தண்ணீரில் ஒரு லிட்டர் கலந்து பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி வருகிறேன். தற்போது நாளொன்றுக்கு 500 கிலோ தக்காளியை அறுவடை செய்து கிலோ 1 ரூபாய்க்கு விற்று வருகிறேன். லாபம் குறைந்த அளவில் வந்தாலும் பொதுமக்கள் நேரடியாக பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய ஆப்பை உருவாக்கி உள்ளேன். மேலும், எங்களது ஊரில் ஒரு சில்லரை கடையை திறந்து விற்பனை செய்து வருகிறேன். எனது ஆப்பை பலர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் வாயிலாக ஆர்டர் செய்து ஆம்பூர், பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து நேரடியாக வந்து காய்கறிகளை பெற்று செல்கின்றனர். மேலும், சொந்தமாக 5 பசுமாடுகளை வளர்த்து வருவதால் இதன் மூலம் கிடைக்கக்கூடிய பால் விற்பனை செய்தும், மாடுகள் இடும் சாணம், கோமியம்  ஆகியவற்றை  எருவாக பயன்படுத்தி வருகிறேன் என்றார்.

Related Stories: