எல்லையில் துப்பாக்கியுடன் நக்சலைட்டுகள் மிரட்டல்: சோதனைச்சாவடிகளில் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

பந்தலூர்: பந்தலூர் அருகே பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கோவை மேற்கு மண்டல ஐஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் துப்பாக்கியுடன் வந்த 4 நக்சலைட்டுகள், அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடியிருப்புகளை புதுப்பித்தல், சாலை, நடைபாதை உள்ளிட்ட எந்தவிதமான வசதிகளையும் அரசுக்கு கோரிக்கைகள் வைத்தும் செய்து கொடுக்கவில்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலில் யாரும் வாக்களிக்கக்கூடாது என அரசுக்கு எதிராக வேண்டுகோள் விடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் நக்சலைட்டுகள் தேர்தல் புறக்கணிப்பு செய்ய அழைப்பு விடுத்ததால் கேரளா அரசு அதிவிரைவு படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் காரணமாக நேற்று கேரளா மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நக்சலைட்டுகள் வந்து சென்ற கம்பமலை கைதகொல்லி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கேரளாவில் நக்சலைட்டுகள் நடமாட்டத்தால் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் எல்லைப்பகுதியில் உள்ள தமிழக சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஷ்வரி பந்தலூர் அருகே கேரள-தமிழக எல்லைப்பகுதியில் உள்ள பாட்டவயல், நம்பியார்குன்னு, நாடுகாணி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.

The post எல்லையில் துப்பாக்கியுடன் நக்சலைட்டுகள் மிரட்டல்: சோதனைச்சாவடிகளில் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: