கொரோனா சிகிச்சைக்கு அவசியமான ரெம்டெசிவிர் மருந்து விலை குறைப்பு: இனி ரூ.899க்கு கிடைக்கும்

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு அவசியமாக பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தின் விலையை குறைக்க மருந்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன்மூலம், ரெம்டெசிவிர் தடுப்பூசி இனி ரூ.899 விலையில் கிடைக்கும். கொரோனா 2வது அலை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 692 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, 3வது நாளாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 1 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது. இதே போல், நேற்று ஒரே நாளில் 1,341 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 லட்சத்து 79 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவசியமாக தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், இறப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த, ரெம்டெசிவர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல், ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்தின் விலை அதிகமாக இருப்பதால் கள்ளச்சந்தையில் அதிகளவில் நடமாடுவதை தடுக்க, மருந்தின் விலையை குறைக்க அதன் உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியது. அதை ஏற்று மருந்தின் விலையை குறைக்க மருந்து நிறுவனங்கள் நேற்று சம்மதித்தன. இதன்படி, இந்த மருந்தின் விலைகள் ரூ.1000 முதல் ரூ.2,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.

* குமாரசாமி, ரிஜிஜூக்கு தொற்று

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரின் மகன் நிகில்கவுடா, மனைவி அனிதா எம்எல்ஏ ஆகியோருக்கும் வைரஸ் தொற்று உறுதியானது. எடியூரப்பா சிகிச்சை பெறும் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற குமாரசாமி முயன்றார். ஆனால், அங்கு போதிய படுக்கைகள் இல்லாததால், அவர் அப்போலோவில் சிகிச்சை பெறுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

* உலக அளவில் பலி 30 லட்சம்

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நேற்று தொட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி, 30 லட்சத்து 1,892 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்து 66 ஆயிரத்து 240 பேரும், பிரேசிலில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 749 பேரும், மெக்சிகோவில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேரும் இந்தியாவில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 649 பேரும் பலியாகி உள்ளனர். இதே போல், உலகளவிலான பாதிப்பு எண்ணிக்கையும் 14 கோடியை தாண்டியது. இதுவரை 14 கோடியே 68 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>