கொரோனா பரவும் சூழலில் சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதித்தால் பாதுகாப்பது எப்படி?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதித்தால் அவர்களை பாதுகாப்பது எப்படி என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை, மனுவை தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த வக்கீல் மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழாபிரசித்தி பெற்றது. திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்.15 முதல் 31 வரை நடக்கிறது. ஏப்.27ல்  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களின் பங்கேற்பின்றி விழா நடக்கிறது. இதனால் பக்தர்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கிறது.

எனவே, திருவிழாவில் குறிப்பிட்ட அளவு பக்தர்களை அனுமதிக்கவும், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை சித்திரை வீதியில் நடத்தவும், ஏப்.25ல் தேரோட்டத்தை மாசி வீதிகளில் நடத்தவும், ஏப்.27ல் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை நடத்தவும், இதற்கென குறிப்பிட்ட அளவு பக்தர்களை அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கோயில் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் வக்கீல்கள் சண்முகநாதன், நாராயணகுமார் ஆஜராகி, ‘‘மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினசரி விழா முடிந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். விழா மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் வெப்சைட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது’’ என்று பதில் அளித்தனர்.  

இதையடுத்து நீதிபதிகள், ‘‘சித்திரை திருவிழாவின்போது, சிறப்பு பாஸ் மற்றும் விஐபி பாஸ் என எதற்கும் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் அனைத்து விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழா முடிந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டாம் அலை காலத்தில் பாதுகாப்பு முக்கியம். பக்தர்களை அனுமதித்தால் அவர்களை பாதுகாப்பது எப்படி? இதையெல்லாம் கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம்  தலையிட விரும்பவில்லை. இரண்டாம் அலையை தடுக்க வேண்டுமென்பதால், பொது நலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென்பதை ஏற்க முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: