அம்பேத்கர் சிலைக்கு மாலை பாஜவினர் விரட்டியடிப்பு: கல்வீச்சால் மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு பாஜவினர் மாலை அணிவிக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல், கல்வீச்சு சம்பவம் நடந்தது. அம்பேத்கரின் 130-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மதுரை அவுட்போஸ்ட்டில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது வி.சி.க.தலைவர் திருமாவளவன் மாலை அணிவிக்க வந்ததால், ஆயிரக்கணக்கான அக்கட்சியினர் திரண்டிருந்தனர்.

அப்போது, நத்தம் ரோடு வழியாக மதுரை மாவட்ட பாஜ தலைவர் சுசீந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ‘‘திருமாவளவன் மாலை அணிவித்து சென்ற பின்பு, சிலைக்கு மாலை போடுங்கள்’’ எனக்கூறி தனியாக நிற்குமாறு தெரிவித்தனர். ஆனால், போலீசாரின் பேச்சை கேட்காமல், பாஜவினர் கொடியுடன் சிலை அருகே முன்னேறி வந்தனர். இதற்கு வி.சி.கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘பாஜ கட்சியினர் மாலை அணிவிக்கக்கூடாது. திரும்பி செல்லுங்கள்’’ என கோஷம் எழுப்பினர். ஆனால் அவர்கள் மேலும் முன்னேறி வந்ததால், திடீரென்று இரண்டு கட்சியினரும் மோதிக்கொண்டனர்.

அப்போது திடீரென்று ஒரு கும்பல், பாஜவினரை விரட்டி சென்று, கற்களை வீசியும், கட்டையாலும் தாக்குதல் நடத்தினர். இதனால் பாஜவினர் சிதறி நாலாபுறமும் ஓடினர். இதேபோல் பெரியார் சிலை அருகே இருந்து மற்றொரு பாஜ பிரிவினர் மாலை அணிவிக்க வந்தனர். அவர்கள் மீதும் சரமாரி கல் வீசப்பட்டது. இதனால் அவர்களும் சிதறி ஓடினர். உடனே, பாதுகாப்பில் இருந்த போலீசார், இரண்டு தரப்பையும் தடுத்தி நிறுத்தினர். வி.சி.கட்சியினரின் கடும் எதிர்ப்பால், பாஜவினர் மாலை அணிவிக்காமல் திரும்பி சென்றது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>