ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களும் நர்ஸ்களும் எப்போ வருவாங்கன்னு தெரியவில்லை-கிராமமக்கள் வேதனை

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா கண்ணங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அடுத்து கூடுதலாக ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெங்களுரில் தொடங்கப்பட்டு 15 மாதங்கள் ஆகிறது. சிறுவாச்சி, தேரளப்பூர், களத்தூர், வெங்களூர், உஞ்சணை, குடிகாடு, என ஆறு பஞ்சாயத்துக்களிலும் உள்ள கிராமப் பொதுமக்களுக்கு இம்மருத்துவமனை பெரிதும் பயனாக இருக்கிறது. அன்றாடம் 50 நபர்களுக்கும் மேல் சிகிச்சைக்காக வருகின்றனர்.

மகப்பேறு மருத்துவத்திற்காக பெண்கள் வருகை அதிகமாக இருக்கிறது. இதற்கென தனிப்பிரிவு செயல்பட்டு வருகின்றது. கிராமங்களில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவகோட்டைக்கு வருவதற்கு பதிலாக வெங்களுரிலேயே மருத்துவம் பார்க்க கிராம மக்கள் செல்கின்றனர். மருத்துவமனையில் இரண்டு டாக்டர்கள் இருந்தனர். அதில் ஒரு டாக்டர் அனுமந்தக்குடியில் உள்ள மினி கிளினிக் சென்று விட்டார். ஒரு டாக்டர் காரைக்குடியில் இருந்து வருகிறார்.

ஒரு பெண் டாக்டர் திருவேகம்பத்தூர் பிளாக் குலமங்கலம் கிராமத்தில் இருந்து டெப்டேஷனாக வந்து மருத்துவம் பார்க்க வருகின்றார். ஒரே ஒரு செவிலியர் உண்டு. இவர்கள் மூவருமே காலை 11 மணிக்கு மேல் தான் வருகின்றனர். வந்த சில மணி நேரங்களிலேயே வீட்டிற்கு சென்று விடுவர். மருத்துவமனை இயங்கும் நேரம் காலை 9 மணி முதல் 4 மணி வரை என அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது.

இது குறித்து காளியம்மாள் கூறுகையில், வயதான நாங்கள் டவுனுக்கு சென்று வைத்தியம் பார்க்க வழி இல்லை. காலை 8 மணிக்கே வந்திருந்து காத்திருக்கிறோம். டாக்டர்களும் நர்ஸ்களும் எப்போ வருவாங்கன்னு தெரியவில்லை. பெரும்பாலான நாட்கள் டாக்டர்கள் இன்றி நர்ஸ்கள் தான் வைத்தியம் பார்த்து அனுப்புகின்றனர் என்றார். ஏழை எளிய மக்களின் குடும்பங்களுக்கு பயனாக இருக்கும் மருத்துவமனை செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: