ஊர்மெச்சிகுளம்-கள்ளிக்குடி மார்க்கத்தில் கிராவல் பரப்பியாச்சு; சாலைப் பணி எப்போ-போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி

வாடிப்பட்டி :  சமயநல்லூர் அருகே, ஊர்மெச்சிகுளத்திலிருந்து கள்ளிக்குடி செல்லும் சாலைப் பணி கிடைப்பில் போடப்பட்டதால், போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மதுரை மேற்கு ஒன்றியம், தோடநேரி ஊராட்சியில் கள்ளிக்குடி கிராமம் உள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதியில் உள்ள இக்கிராமத்தில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு ஊர்மெச்சிகுளத்திலிருந்து புதிய சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்கள் முன்பு தொடங்கியது.

ஆரம்பம் முதலே பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலையை பெயர்த்தனர். அதன்பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், வாக்கு சேகரிக்க செல்லும்போது ஆளுங்கட்சியினரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக, பெயர்த்தெடுத்த சாலையில் அவசரம், அவசரமாக கிராவலை கொட்டினர்.

அதன்பின் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், ஊர்மெச்சிகுளம் மற்றும் கள்ளிக்குடி பகுதி மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் பறக்கும் தூசிகளால், குடியிருப்புவாசிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, பல மாதமாக இழுத்தடிக்கப்படும் ஊர்மெச்சிகுளம்-கள்ளிக்குடி சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: