இரவு 10 மணிக்கு மேல் எப்படி திறந்திருக்கலாம்...? ஓட்டலில் சாப்பிட்டவர்கள் மீது லத்தியால் எஸ்.ஐ. தாக்குதல்: கோவை கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவை: இரவு 11 மணி வரை ஓட்டல்கள் திறந்திருக்கலாம் என்று அரசு அனுமதித்துள்ள நிலையில், கோவையில் இரவு 10 மணிக்கே ஓட்டலை மூடச்சொன்ன எஸ்ஐ அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியதால் தாக்கினார்.  கோவை காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த காட்டூர் போலீசார் கடைகளை மூடச்சொல்லி மைக்கில் அறிவிப்பை வெளியிட்டு கொண்டு வந்தனர். சப் இன்ஸ்பெக்டர் முத்து என்பவர் பாதி மூடப்பட்டிருந்த ஓட்டலுக்குள் புகுந்து ஏன் இன்னும் கடைய மூடவில்லை? என உரிமையாளர் மோகன்ராஜிடம் கேட்டுள்ளார். அவர் இரவு 11 மணி வரை கடை திறக்கலாம் என அரசே அனுமதி வழங்கியிருக்கிறது எனக்கூறியிருக்கிறார். ‘‘என்னிடமே சட்டம் பேசுகிறாயா? கடையை மூட சொன்னால் மூட மாட்டீர்களா?, கடையில ஒருத்தரும் இருக்கக்கூடாது’’ என கூறி அவர் லத்தியை சுழற்றி தாக்க ஆரம்பித்தார்.

ஓட்டலில் சாப்பிட்ட ஆறுமுகம் (52), சதீஷ் (43), பூமிநாதன், கதிர்வேல் உள்ளிட்டோர் லத்தி தாக்குதலுக்குள்ளானார்கள். அவர்கள் அடிக்கு பயந்து வெளியேற முயன்றனர். அவர்களை வெளியே செல்லவிடாமல் மறைத்து நின்று மீண்டும் அடித்துள்ளார். ஓசூரை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் அவருடன் வந்த பெண்கள் சிலர் தோசை சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்கள் சாப்பிடும்போது லத்தியால் தாக்கியுள்ளார். இதில் ஜெயலட்சுமிக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது.

இதுபற்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், ‘‘இரவில் பேருந்தில் ஓசூர் செல்ல காத்திருந்தோம். இரவு 11 மணி வரை கடைகள் திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 10 மணிக்கே கடைகளை மூடச்சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களை தாக்கினர். எங்களைப்போல் மேலும் சிலரை போலீஸ்காரர் தாக்கினார்’’ என்றனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலைய பகுதியில் ஓட்டல் கடை நடத்துவோரும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி தாக்குதல் நடத்திய சப்இன்ஸ்பெக்டர் முத்துவை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றினர். இதுதவிர, பொதுமக்களை எஸ்ஐ தாக்கிய விவகாரத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு மனித உரிமை ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, விசாரணை குறித்த அறிக்கையை 14 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் பசி தாங்காமல் சாப்பிட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளையும், காவல்துறை மீது கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

* பேக்கரி கடையில் அடாவடி

கோவை மாவட்டம் உக்கடம் ஆத்துப்பாலத்தில் ஒரு பேக்கரி கடை உள்ளது. இந்த கடை கடந்த 29ம் தேதி இரவு 10.30 மணிவரை திறந்துள்ளது. அப்போது, குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ. ஒருவர், கடையில் புகுந்து கேசியரை லத்தியால் தாக்கினார். பின்னர், அவரது சட்டை காலரை பிடித்து இழுத்து சென்றுள்ளார். இதன் வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சப் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: