ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு தொற்று தினசரி பாதிப்பு வரலாறு காணாத உச்சம்: ஒரே மாதத்தில் வைரஸ் பரவல் 6 மடங்கு அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், தினசரி பாதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாயினர். 839 பேர் பலியாகினர். ஒரே மாதத்தில் வைரஸ் பரவல் 6 மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை படு பயங்கரமாக உள்ளது. முதல் அலையை காட்டிலும், வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் தினசரி பாதிப்பு வெறும் 9 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது ஒன்றரை லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 4ம் தேதி முதல் முறையாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், அடுத்த 7 நாளில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று தினசரி வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வெளியிட்ட புள்ளி விவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 879 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 4 வாரத்திற்கு முன் தினசரி பாதிப்பு 25,320 ஆக இருந்த நிலையில் தற்போது இது 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்தே வைரஸ் தொற்றின் வேகத்தை அறியலாம். இதே போல, பலியாவோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 839 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 4 வாரத்திற்கு முன் தினசரி பலி 161 ஆக இருந்த நிலையில், தற்போது 800 ஐ தாண்டியிருக்கிறது.

புதிதாக 1.5 லட்சம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 90,584 பேர் குணமாகி உள்ளனர். தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 11 லட்சத்தை எட்டி உள்ளது. மொத்தம் 11 லட்சத்து 8,087 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 1 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 275 ஆகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 32வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பு கடுமையாக அதிகரித்திருப்பது கொரோனா மீது மக்கள் மத்தியில் மீண்டும்பீதியை ஏற்படுத்தி வருகிறது.

சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவை பரிசீலிக்கணும்

கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை தொட்டு வரும் நிலையில், மே மாதம் 4ம் தேதி சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா 2வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அனைத்து தரப்பினர் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும். இந்திய இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் மத்திய அரசு விளையாட விரும்புகிறதா?’ என கேள்வி எழுப்பி உள்ளார். இதே போல, தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அமைச்சர் பொக்ரியாலுக்கு பிரியங்கா காந்தியும் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: