காட்டு யானைகளுக்கு பயந்து வாழை மரங்கள் அகற்றம்

பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காடுகளில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை  ஏற்பட்டு காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் குடியிருப்பு பகுதியில் யானை விரும்பி உண்ணும் பலாப்பழங்களை காயாக இருக்கும் போதே வனத்துறையினரால் அகற்றப்பட்டது. பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம்  டேன்டீ 4 பி பகுதியில் ஏராளமான டேன்டீ தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில்  காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து தொழிலாளர் குடியிருப்புகளை சேதம் செய்வது மற்றும் வாழை,பலா உள்ளிட்ட பயிர்களை தின்று தீர்த்து வருகிறது.தொடர்ச்சியாக நடைப்பெற்று வரும் சம்பவத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேற்று கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்கள் கூறுகையில் தெருவிளக்குகள் இல்லாததால் யானை நடமாட்டம் குறித்து தெரிவதில்லை தெருவிளக்குகள் மற்றும் குடியிருப்பையொட்டி கழிப்பறைகள் அமைத்து தரவேண்டும் என்றனர். சம்பவ இடத்திற்கு நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் லீணாசைமன் மற்றும் வனச்சரகர் கனேசன் ஆகியோரை வரவழைத்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும்,நகராட்சி சார்பில் அப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பொதுமக்கள் யானைகளுக்கு பயந்து குடியிருப்பு பகுதியில் இருக்கும் வாழை மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை சார்பில் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை துரத்தும் பணியில் ஈடுபடுத்துவதாக தெரிவித்தனர்.

Related Stories: